வருடப்படாத வடுக்கள்

 

அலையலையாய் குளிர்வந்து
அணைக்கும் பின்மாலைப்பொழுதில்
எதிர்பாராச் சந்திப்பெனும் பரிசால்
இனம்புரியா இன்பத்தை ஊட்டுகின்றாய்

எதிரெதிரே நிற்கும் இன்பத்தை
இருவராலும் நம்பமுடியவில்லை
ஆச்சரியத்தில் புருவம் சுருக்கி
அழகழகாய் யோசிக்கின்றாய் நீ!

இந்த உலகத்தில் இன்றோடு பேச்சு
வற்றிப்போய்விடும் என்பதுபோலே
பேசிப்பேசி வார்த்தைகளால்
எனக்குள் உன்னை ஊட்டுகின்றாய்

உருண்டு மருண்டு மிரட்டும்
உன் விழிகள் இரண்டால்
எல்லா வார்த்தைகளுக்கும் வடிவாய்
வர்ணம் தீட்டியனுப்புகின்றாய்

அயர்ச்சியில் மெல்லத்தலை சாய்த்து
புறங்கழுத்து நீவும் விரல்களில்
மயக்கும் ஒரு மயிலின்
நடனத்தை நிகழ்த்துகின்றாய்

அழகாய் இழுத்துமூடும்
இமைச் செவுள்களின் அழகில்
ஒரு குழந்தையின் தூக்கத்தை
எனக்குள் தூளியாட்டுகின்றாய்

எல்லாம் விசாரித்து
எல்லாம் பகிர்ந்தபோதும்
பிரிந்த நாட்களின் வடுக்களை
மிகக் கவனமாய் தவிர்க்கின்றோம்

விதி ஒதுக்கிய காலத்தின்
எல்லாச்சொட்டுகளும் தீர்ந்துபோய்
கடைசிச்சொட்டு மெல்லச் சொட்ட
ஓடும் ரத்தம் ஒருகணம் உறைகின்றது

இதயம் படபடக்க
மனது வெடவெடக்க
நதியின் சுழித்த நகர்வு போலே
பின்வாங்கும் அலைபோலே

கையசைத்துப் போகும் முன்
போகவா எனக் கேட்கிறாய்
போகவேண்டாம் என நான்
சொல்வதற்காகவே!

~

Author

ஈரோடு கதிர்

Recent Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *