மரபணுவில் மிச்சம் வைத்திருக்கும் குரங்கின் பிரியம்

னிதர்களுக்கிடையே உறவுகள் பூக்கும் தருணம் எத்தனை அழகானது என்பது அந்தத்தருணத்தைச் சரியாக உணர்பவர்களுக்கு மட்டுமே தெரியும். விதையொன்று தன் உடல்பிளந்து, மண் கிழித்து, வான் நோக்கி வரும் தருணம் போல், மொட்டொன்று மலராகத் தன்உடல் விரிக்கும் தருணம் போல், மகத்தானது அந்தத் தருணம். சிந்தனையில்ஒத்திருப்பவர்கள், ஒரே திசையில் நாட்டம் மிக்கவர்கள், விவாதங்களில் இனம் காண்போர்,தனிப்பட்ட தம் திறன் மூலம் வியப்பேற்படுத்துபவர், ஒரே இனம் மற்றும் மண்ணைச்சார்ந்தோர் என்பதுள்ளிட்ட எத்தனையோ காரணங்கள் ஒருவரையொருவர் இணைக்கஇங்கிருக்கிருக்கின்றன.

‘இந்த தொழில்நுட்ப யுகம் மனிதர்களை மனிதர்களிடமிருந்து பிரிக்கிறது’ என்றகுற்றச்சாட்டு இங்குண்டு. ‘மனிதர்களின் பங்களிப்பை, தேவையைத் தவிர்க்கும்வகைகளில் இப்படிப்பட்ட தொழில்நுட்பங்கள் மனிதர்களை வெகுவாகத்தனிமைப்படுத்துகின்றன’ என்பதற்குப் பலவிதமான வாதங்கள் வைக்கப்படுவதுண்டு.‘இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படாமல் போயிருந்தால் சிலரின் விரல்களோடு இருந்தபிணைப்பை, நாம் தவற விட்டிருக்க மாட்டோம்’ என்ற வாதம் ஒரு வகையில் சரியென்பதுபோலவும் தோன்றும்.

அதே நேரம் ‘பலரின் விரல்களோடு கொண்டிருக்கும் பிணைப்பை இந்தத் தொழில்நுட்பம்இல்லாமல் போயிருந்தால் அடைந்திருக்கவே மாட்டோம்’ என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். கற்பனை செய்து பார்த்திருக்க முடியாத அளவிற்கு வெகு எளிதாகமனிதர்களோடு மனிதர்களை இணைத்து வைக்கின்றது. தெரியாத திசைகளிலிருந்து,அறியப்படாத ஊர்களிலிருந்து இந்த யுகம் நமக்கு அளித்திருக்கும் உறவுகளை இதனின்றிஎப்படி நாம் அனுபவப்பட்டிருக்க முடியும்?!.

விமானப் பயணமொன்றில் பணியாளர்களாய் இருந்த இருவருக்குமிடையே நட்பு பூத்ததருணம், அது காதலாகக் கனிந்த தருணம், அதை உணர்ந்த விதம், காத்திருந்து அதைப்பகிர்ந்துகொண்ட தருணம் குறித்து மும்பையின் மாந்தர்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் வாசித்தபதிவொன்றினை இங்கு பகிர விரும்புகிறேன்…

”2013ம் ஆண்டில் விமானமொன்றில் பணியாளர்களாய்ப் பறந்து கொண்டிருந்தபோதுநாங்கள் சந்தித்தோம். நான்கு மணி நேரப்பயணமாக இருந்தாலும் அது சிறப்பானது.இறங்கும்போது அவளிடம் தொடர்பு எண் கேட்டேன். பேசத் துவங்கினோம், அதன்பின்நிறையப் பேசினோம். அவளோடு உரையாடுவது இலகுவானது. இரவு உரையாடல்கள்விடியல்வரை நீண்டதை உணர்ந்ததில்லை. அவள் மீது காதல் கொண்டிருப்பதை உணர்ந்ததருணத்தில் நான் கத்தாரிலும், அவள் மும்பையிலும் இருந்ததால், அடுத்து நாங்கள்எப்போது சந்திப்போம் என்பது கூடத் தெரியது

அதனால் எப்போதாவது சந்தித்துக்கொள்ளலாம் என்ற முடிவில் வேலையில்மூழ்கிப்போனோம். சமீப காலமாய்ப் பேசாதிருந்த சூழலில் கடந்த ஆண்டு அவளை நான்ஃபேஸ்புக்கில் கண்டு, மும்பைக்கு நான்கு நாட்கள் வருவதாகவும் அப்போது சந்திக்கவிரும்புவதாகவும் செய்தி அனுப்பினேன். சந்திக்கப்போகிறோம் எனும் நினைப்புமகிழ்ச்சியூட்டியது. சந்தித்து இரண்டாண்டுகள் இருந்தாலும், அவளை நெருக்கமாகஉணர்ந்தேன். நான் நான்கு நாட்கள் மும்பையிலிருந்தாலும், அவளுக்கு விமானம் பிடிக்கவேண்டிய சூழல் இருந்ததால், ஐந்து நிமிட நேரத்திற்கேனும் சந்திக்க விரும்பினேன்.

அவளுடைய வீட்டிற்குச் சென்றேன். இரண்டு ஆண்டுகள் கழித்து முதன்முறையாகஅவளைச் சந்தித்த ஐந்து நிமிட அவகாசத்தில்எதையும் சிக்கலாக்க விரும்பவில்லை,உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்என்று சொன்னேன். அவள்அதிர்ச்சியடைந்தாள், இதையெல்லாம் கடந்துவிட்டதாக நினைத்திருந்தாள். அப்போதுஅவள் அதிகம் பேசாமல் சென்றாலும் விமானம் ஏறும்முன் தன் ஒப்புதலைச் சொன்னாள்.எங்கள் பயணத்தில் இடைவெளி நீண்டதாக இருந்தாலும், யாரையும் இவ்வளவுநெருக்கமாக உணர்ந்ததில்லை. அடுத்த முறை சந்தித்தபோது, எங்கள் முதல் பயணஇருக்கைகளைக் குறிக்கும் வகையில்எல்2 லவ்ஸ் ஆர்3” எனச் செதுக்கப்பட்டமோதிரத்தை பரிசளித்தேன். நாங்கள் மீண்டும் இந்த வாரம் விமானங்கள் பிடிக்கவேண்டும், ஆனால் ஏரோபிளான் மோடில் தான் இப்போதைக்கு இருக்க வேண்டும். இந்தஇடைவெளி நிரந்தரமான ஒரு முடிவையெட்ட வேண்டுமென்றால்லாம் நான் காத்திருக்கமுடியாது.”   

இந்தப் பகிர்வினூடே அவர்களின் ஒவ்வொரு தருணங்களையும் மனதில்காட்சிப்படுத்தும்போது, மனித வாழ்க்கை தன்னுள் வைத்திருக்கும் சுவாரஸ்யங்கள் குறித்தபிரமிப்பு அகன்று விரிந்தது. இதுபோல் நம் பார்வைக்கு எட்டாமல், பகிரப்படாமல்விடுபட்டிருக்கும் உறவுகள் குறித்த கதைகள் கோடானு கோடி இருக்கலாம்.

இது தகவல் தொழில்நுட்ப யுகம் என்பது போலவே, உறவுகளுக்கான யுகமென்றும் கருதத்தோன்றுகிறது. இப்படி எட்டும் நட்புகளில் வயதுக்கும், சூழலுக்கும் ஏற்ப சில ரசங்கள்கூடியோ குறைந்தோ இருப்பதுமுண்டு. அறிதல்களில், பழக்க வழக்கங்களில், விருப்புவெறுப்புகளில், கொள்கைகளில் இணங்கவும், முரண்படவும் பல தருணங்கள் அமையும்.

மனித உறவின் கதகதப்பு இளைப்பாறலுக்கான களம். இளைப்பாறல் இல்லாமல்ஓடிக்கொண்டேயிருத்தல் இயலுமா, இயலாதா என்பதைவிட அதற்கான அவசியங்கள்என்ன என்பதைத் தெரிந்துகொள்தல் நலம்.

இந்த யுகம் மனிதர்களை எளிதாக எட்டிப்பிடிப்பதற்கும், வெட்டிவிடுவதற்குமான காலம்.அன்பினைப் பகிர்ந்துகொள்ள நளினமான ஆயிரமாயிரம் வழிகள். விதவிதமானமனிதர்களை, அவர்களின் மனநிலைகளை, குணங்களை வாசிக்க மிக நிறைவானவாய்ப்புகளும் ஏராளம்.

இப்படியாக உருவாகும் உறவுகளில் தீபத்தின் உள்ளேயிருக்கும் இருள் போலே, மிகநுண்ணிய கசப்பான அனுபவங்கள் எப்போதாது ஏற்படுவதை நாம் தவிர்க்கவும் முடியாது.திட்டமிட்டுக் களம் கண்டு மற்றவரை வஞ்சிக்கவும் இந்த மெய்நிகர் உலகம் ஏராளமானவாய்ப்புகளை மிக எளிதாக அள்ளித்தருகின்றது. நம்புதவதற்கு நிகராகக் கவனமாகஇருப்பதும், சந்தேகிப்பதற்கு நிகராக மனிதத்தின் மேல் நம்பிக்கை கொள்வதும் அவசியம்.

kathir-nm

எவ்வகையிலேனும் மனிதர்களுடனான உறவை, பிணைப்பை நாம் உறுதிசெய்துகொண்டே இருத்தல் நலம். மனிதர்கள் இல்லாத வாழ்க்கையின் வெட்டவெளி சிலநேரங்களில் ஆசுவாசம் தருவதாயினும் பல நேரங்களில் அச்சமமூட்டக்கூடியது. அந்தமௌனத்தின் பேரிரைச்சல் எத்தகையது என்பது அனுபவிக்கிறவர்களுக்கே தெரியும்.

உறவுகள் துண்டுபடும், துண்டிக்கப்படும் நேரம் எத்தனை வாதை நிரம்பியது என்பதையும்அனுபவிக்கிறவர்கள் மட்டுமே அறிவர். உறவுகளுக்குள் பிரியமும் பிணக்கும் போட்டி போட்டுக் கொண்டேயிருக்கும், சில பிணக்குகள் உறவினைப் பலப்படுத்தும், சிலபிணக்குகள் உறவினைத் துண்டாடும். பிணக்கின் பொருட்டு, பிரிதலின் பொருட்டுஉறவினைக் கொச்சைப்படுத்துவது என்பது இந்த யுகம் வழங்கியிருக்கும் மிக எளிமையானசாபங்களில் ஒன்று. மனிதம் ஆழக் குழி தோண்டி புதைக்கப்பட்டு, அதன் மேல் வெறுப்பின்விதைகள் தூவி, உணர்வுகளை உணவாய்ப் படைத்து கொழுத்துச் செழித்து வளர்க்கவைப்பதும் எளிது.

*

ரபரப்பைச் சற்றும் தொலைக்க மறுக்கும் ஒரு வார நாளின் மாலைப் பொழுது. எதிரெதிரே நெருக்கியபடியும், உரசியபடியும் வாகனங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஆக்ஸ்போர்ட்ஹோட்டல் வாசல் முன்பு பரபரக்கிறது கூட்டம். இரு சக்கர வாகனங்களில் நின்றபடியே சிலர், நெரிசல் குறித்துக் கிஞ்சித்தும் கவலை கொள்ளாத பலர் என சரசரவென கூட்டம் குவிகிறது. கூட்டத்தில் பல கைகள் தங்கள் அலைபேசியை உயரப் பிடித்து நிழற்படமும், காணொளியும் பதிவு செய்வதில் முனைப்பாய் இருக்க, கூட்டம் நோக்கும் திசையை நானும் பார்க்கிறேன், முகப்புச் சுவரின் மீது ஒரு குரங்கு அமர்ந்திருக்கின்றது.

’பரபரப்பான இந்தப் பகுதியில் குரங்கிருக்கிறதா!?’ எனும் ஆச்சரியத்தோடும், ‘ஒரு குரங்கைப் பார்க்கவா இத்தனை கூட்டம் கூடுகிறது!?’ எனும் யோசனையோடும்கைபேசிகளில் பிடிபடும் குரங்கைக் கவனித்தேன். குரங்கின் அடிவயிற்றோடுஒட்டிப்பிணைந்தபடி ஒரு கறுப்பு நாய்க்குட்டி. அதை இந்தக் கணத்தில் நாய்க்குட்டியாகக் காண்பதைவிட, குழந்தையென்றே பாவிக்கத் தோன்றுகிறது. மனிதர்களையும், அவர்கள் கையில் நடுங்கியபடி தன்னை நோக்கும் கைபேசிக் குவியலையையும் சற்றும் பொருட்படுத்தாமல் ஒரு கையைச் சுவற்றில் ஊன்றியபடி, வயிற்றோடு ஒட்டியிருக்கும்,நாய்க்குட்டியை மறுகையால் தடவிக் கொண்டிருக்கிறது அது.

மனிதனுக்குக் கொடுத்தனுப்பியது போக, தன் மரபணுவில் பிரத்யேகமாக மிச்சம் வைத்திருக்கும் குரங்கின் சேமிப்பிலிருந்து வழியும் அந்தப் பிரியத்தைக் காண ஆச்சரியத்தில் மனம் மலர்கிறது. மன மலர்ச்சியை உணரும் தருணம் சிலிர்ப்பூட்டும் ஒன்று.பார்க்கும் எவருக்கும் தானொரு நாய்க்குட்டியாக மாறி குரங்கின் வயிற்றோடு அப்பிக்கொள்ள மாட்டோமா எனும் ஏக்கமூட்டும் தருணம்

அன்பும், உறவும் வழக்கமான வழியோ, மெய்நிகர் வழியோ…. எவ்வழிப்பட்டதாயின் என்ன…!?வாழ்நாளில் ஒரே ஒருமுறையேனும், அப்படியான அன்பை, வருடலை, அதைக் கோரும்யாரிடமேனும், நாய்க்குட்டியை வருடும் குரங்குபோல் நான் வழங்கிவிட்டால் போதுமெனஅந்தக் காட்சி நினைவுக்குள் வரும்பொழுதெல்லாம் தோன்றுகிறது.

”நம்தோழி”அக்டோபர் இதழில் வெளியான கட்டுரை

Artikel 22 die generalversammlung kann nebenorgane einsetzen, soweit sie dies zur wahrnehmung ihrer aufgaben für erforderlich hält
Author

kathir

Recent Posts