பாசாங்குப் பசி

 

மண்டப முகப்பில்
கும்பிடுகளை உதிர்த்து
மணமேடை நிழற்பட
பதிவு வரிசையைத் தவிர்த்து
பசியாத வயிற்றுக்கு
பந்தியில் இடம் பிடித்தேன்…

சூழலுக்கு பொருந்தா வேடம்பூண்ட
இடது பக்கயிருக்கைக் கிழவியின்
இலை இளைத்துக்கிடந்தது
அவர் தேகம் போலவே…

வலதுகையால் பிட்டதை
பாசாங்காய் வாய் கொறிக்க
எவரும் அறியா சூட்சுமத்துடன்
இடது கை இழுத்து
புதைத்துக்கொண்டிருந்தது மடியில்…

பசிக்காத வயிற்றுக்கு
பாசாங்காய் ருசித்துண்ணும் எனக்குப்
பரிமாறியவர் பாட்டியின்
இளைத்துக்கிடந்த இலையையும்
இட்டு நிரப்பிப்போனார்…

முதுமை முடக்கிய கணவனோ
புத்திசுவாதீனமில்லா மகனோ
தீரா நோயில் விழுந்த மகளோ!
பெற்றவரை இழந்த பேரன் பேத்தியோ!
உள்ளம்பேதலித்த உடன்பிறப்போ
உயிர்வாடும் நெருங்கிய உறவோவென
எவரின் பசியாற்றப்போகிறதோ
இந்த மடியின் கனம்…

அந்தப் பாழும் கிழவியின்
சுருங்கிய வயிற்றையோ,
பசியோசை வழியும்
அந்தவீட்டின்
இன்னொரு வயிற்றையோ
இந்தப் பாசாங்குப் பசி
தீர்க்கட்டுமே
தற்காலிகமாகவேணும்!

~
நன்றி திண்ணை

Author

ஈரோடு கதிர்

Recent Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *