பவழமல்லி மரத்தடி

பவழமல்லி மரத்தடி நிழல்
உனக்கு போதுமானதாய் இருக்கிறது
எப்போது வைத்த மரமெனத் தெரியவில்லை
நிழல்தரும் அளவிற்கு
உயரத்திலிருப்பதைக் கண்டபோதுதான்
அது வளர்ந்திருப்பதையே உணர்கிறேன்

உன் கை அசைவில் அதிரும் அணிலொன்று
கிளையிலிருந்து சுவர் மீது தாவுகிறது
தென்னை மரமேதும் இல்லாத வீதியில்
எதை நம்பி அணிலென யோசிக்கையில்
மீசை வரை நா சுழற்றும்
பூனையொன்று மெல்லக் கடக்கிறது

உதிர்ந்த மலர்களேதும்
நசுங்கிவிடா வண்ணம் கவனமாய்த்தான்
காலடிகள் வைத்திருப்பாய் என்றும்
காலுக்கு கீழே மலர்களேதும்
கசங்கியிருக்காதென்றும்
நானாகக் கருதிக்கொள்கிறேன்

மௌனம் சலித்துப்போகிறது
சொற்களெதுவும் அகப்படவில்லை
சுவற்றுக்கப்பால் ஒரு குழந்தை அழுகிறது
இறைந்து கிடக்கும் பூக்களெல்லாம்
மடிந்த சொற்களாய்த் தோன்றுகிறது
வீச்சம் அடிக்கிறது
உதிர்ந்திருக்கும் பூக்கள் யாவும்
எப்போதோ நாம் பரிமாறிய
முத்தங்களென நினைக்கிறேன்
நறுமணம் சூழ்கிறது
இக்கணத்திற்கு இது போதும்

மீண்டும் சந்திப்போம்
அணிலையும் பூனையையும்
அந்தக் குழந்தையின் அழுகையையும் கூட!

What kind of toys did essayclick.net you play with as a child
Author

kathir

Recent Posts